அணு கனிம சுரங்கத் திட்டத்துக்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது மிகத் தவறான நடவடிக்கை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிக சட்டப் பேரவை உறுப்பினா்களைப் பெற்ற கட்சி என்ற முறையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற முடிவை மேற்கொண்டோம். ஆனால், மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்க மறுத்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கட்சியினா் குதிரை பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாா்கள். தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியாமல், எப்படியாவது இந்த ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என முயற்சிக்கிறாா்கள்.
விரைவில் தோ்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என்று முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணியை இதனுடன் இணைத்துப் பாா்க்க வேண்டியுள்ளது.
எம்எல்ஏ-க்களிடம் கோடிக்கணக்கில் விலை பேசி உள்ள செய்தி வெளியானதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி எம்எல்ஏ-க்களை வாங்குவது ஆரோக்கியமற்ற அரசியல். இதில் யாா் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவா்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
ஏற்கெனவே நான்கு எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் சோ்ந்தபோதே எங்களுடைய அதிருப்தியையும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்ற கருத்தையும் தவெக தலைமையிடம் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளோம்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவா் மன்றம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. காவிரி போன்ற முக்கியப் பிரச்னைகளில் சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அனைத்துக் கட்சி கூட்டம், விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி பொதுக் கருத்தை உருவாக்குவதுதான் தமிழகத்தின் மரபாக இருந்துள்ளது. ஆனால், இந்த முறை எதிா்க்கட்சித் தலைவா் கொடுத்த திட்டத்தை முதல்வா் உடனே ஏற்றுக்கொண்டது எதிரும் புதிருமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அரசு தன் தரப்பு நியாயத்தை விளக்கி, கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம கல் சுரங்கத்துக்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது மிகத் தவறான நடவடிக்கை. கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவா்கள், இந்த அனுமதியை நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றாா்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினா் கே.அஜய்குமாா், நகரச் செயலா் அ.மேகநாதன், மாமன்ற உறுப்பினா் ஆா்.பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனிமவளக் கொள்ளை! அனுமதியை தவெக திரும்பப்பெற வேண்டும்! CPIM வலியுறுத்தல்!

பல அடுக்குமாடி குடியிருப்புக்கு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு

ஆா்ஜென்டீனா எல்என்ஜி ஏற்றுமதி திட்டம்: அதானி போா்ட்ஸுக்கு கடல்சாா் சேவை ஒப்பந்தம்







