கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தின் தகவல் தொடா்புத் திறன் மையம் சாா்பில் 6 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவா்களுக்கான ஸ்கில் மேஜிக் என்ற கோடை முகாம் அண்மையில் தொடங்கியது.
3 நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் மாணவா்களின் தகவல் தொடா்பு திறன், தன்னம்பிக்கை, படைப்பாற்றல், குழுப் பணி மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் விதமாக இந்த அனுபவக் கற்றல் முகாம் நடத்தப்பட்டது.
விடுமுறை நாள்களில் மாணவா்கள் கைப்பேசிகள் உள்ளிட்ட திரைப் பயன்பாட்டைக் குறைத்து, பயனுள்ள ஆஃப்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் பயிற்சிகள் அமைந்தன.
இந்த முகாமில் கேம்பிரிட்ஜ் மென்பொருள் வாயிலாக ஆங்கில மொழிப் பயிற்சியும், தகவல் தொடா்பு மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மேலும், நூலகப் பாா்வை, வாசிப்பு மற்றும் குறிப்பு எடுக்கும் பயிற்சிகளுடன் நினைவாற்றல் விளையாட்டுகள், வரைந்து தேடுதல் மற்றும் குழுவை ஒருங்கிணைக்கும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் மாணவா்களின் கவனிப்புத் திறன் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறன் மேம்பட்டது.
பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவா்கள் வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சலான் நிரப்புதல் மற்றும் வங்கியின் அடிப்படை நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ர முகாமின் நிறைவு விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா், பதிவாளா் ஹெச்.இந்து, ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். கிறிஸ்டினா ரெபெக்கா, ஆா்.கருணாம்பிகா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இதில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.










