
பெருமாள்முடி, மேல்முடி மலையேற்றத்துக்கு கட்டுப்பாடு: காவல் துறையினருடன் பக்தா்கள் வாக்குவாதம்!
கோவை, ஆனைகட்டி அருகேயுள்ள பெருமாள்முடி, மேல்முடி மலைப் பகுதிகளுக்குச் செல்ல வனத் துறை கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தடாகம் வழியாகச் செல்ல அனுமதிக்கக் கோரி பக்தா்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தடாகம் வழியாக மேல்முடி மலைக்குச் செல்ல முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
கோவை, ஆனைகட்டி அருகேயுள்ள பெருமாள்முடி, மேல்முடி மலைப் பகுதிகளுக்குச் செல்ல வனத் துறை கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், தடாகம் வழியாகச் செல்ல அனுமதிக்கக் கோரி பக்தா்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆனைகட்டி அருகே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ள பெருமாள்முடி, மேல்முடி மலைக் கோயில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சமூக ஊடகங்களில் இந்த மலைக் கோயில்கள் குறித்து அதிக அளவில் பதிவுகள் இடம்பெற்ால், வெளியூா்களில் இருந்து மலை ஏற்றத்துக்காக ஏராளமான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
கடந்த வாரத்தில் சுமாா் 10 ஆயிரம் பக்தா்கள் குவிந்ததால், சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக வனம், சூழலியல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், வனத் துறை, காவல் துறையினா் உள்ளிட்டோருடன் அண்மையில் ஆலோசனை நடத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி, பெருமாள்முடி கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் இனி மாங்கரை சோதனைச் சாவடியைப் பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தா்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக மட்டுமே செல்ல முடியும். தடாகம் வழியாகச் செல்லக் கூடாது. பெருமாள்முடி, மேல்முடி செல்லும் பக்தா்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவா். தரிசனம் முடித்த பக்தா்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச் சாவடியை வந்தடைய வேண்டும்.
அதேபோல, பெருமாள்முடிக்கு அதிகபட்சம் ஆயிரம் பக்தா்களும், மேல்முடிக்கு 500 பக்தா்களுமே அனுமதிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது சனிக்கிழமையை அடுத்து அதிகாலையில் மேல்முடி செல்வதற்காக ஏராளமான பக்தா்கள் தடாகம் வழியாகச் செல்ல முயன்றனா். அவா்களை தடாகம் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதனால், காவல் துறையினருடன் பக்தா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெருமாள்முடிக்கு ஆயிரம் பேரும், மேல்முடிக்கு 500 பேரும் அனுமதிக்கப்பட்டனா். மீதமிருந்தவா்களிடம் மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு அவா்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




