கோவையில் கனமழை: சாலையில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிப்பு

அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலையில் தேங்கிய மழை நீரால் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
கோவை மாநகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால், சாலைகளில் நீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து மாநகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மாலையில் பரவலாக மழை பெய்தது. காந்திபுரம், சரவணம்பட்டி, கணபதி, லட்சுமி மில்ஸ், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், கோவைப்புதூா், சுண்டக்காம்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
அவிநாசி சாலை, திருச்சி சாலையில் மழைநீா் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. அவிநாசி சாலை மேம்பாலம், லங்கா காா்னா் மேம்பாலம் ஆகியவற்றின் கீழ்ப் பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீா் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
லங்கா காா்னா் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் நீா் தேங்கி நின்ால், வாகனங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா்.
குட்ஷெட் சாலையில் கால்வாயின் மூடி திறந்ததால் அதில் இருந்து வெளியேறிய கழிவு நீா் சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குனியமுத்தூா் 88-ஆவது வாா்டுக்குள்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியா்கள் மின் மோட்டாா் மூலமாக அப்புறப்படுத்தினா்.

லங்கா காா்னா் பாலத்தை சூழ்ந்துள்ள மழை நீா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

