ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்படுமா கனிராவுத்தர் குளம்?

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து கனிராவுத்தர் குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Updated on
2 min read

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து கனிராவுத்தர் குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியசேமூர் பகுதியில் ஈரோடு - சத்தி சாலையோரத்தில் கனிராவுத்தர்குளம் அமைந்துள்ளது. எல்லப்பாளையத்தில் உள்ள பெரியகுளத்தில் இருந்து வண்ணாந்துறை வழியாக உள்ள ஓடை வழியாக இக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. மேலும், கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும் இக்குளத்துக்கு நீராதாரமாக விளங்குகிறது.
 100 ஆண்டுகளுக்கு முன் 44 ஏக்கராக இருந்த இக்குளம், இப்பகுதியின் பாசனத்துக்கும், நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும் பயன்பட்டு வந்தது. வீரப்பன்சத்திரம், சூளை, பெரியசேமூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர இக்குளம் மிகவும் பயன்பட்டு வந்தது.
 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் துவங்கி தற்போது குளத்தின் பரப்பளவு மிகவும் சுருங்கிவிட்டது. குளத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து சாயக் கழிவுநீர் குளத்துக்குள் விடப்படுவதால் அந்த நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
 கடந்த 2000-ஆம் ஆண்டு வரை அப்போதைய பெரியசேமூர் நகராட்சி மூலமாக இந்த குளத்தில் மீன் ஏலத்துக்கு விடப்பட்டது. கடைசியாக ரூ. 62,000-க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக இங்கு மீன் இல்லாததால் டெண்டர் விடப்படுவதில்லை.
 குளத்தில் நீர் இல்லாததால் சூளை, பெரியசேமூர், ரோஜா நகர், முதலி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழ் போய்விட்டது.
 ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் குளத்தின் பரப்பளவு இப்போது 13 ஏக்கர் மட்டுமே இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குளத்துக்கு தண்ணீர் வரும் 20 அடி கால்வாயை ஆக்கிரமிப்பாளர்கள் மண் மற்றும் சிமெண்ட் போட்டு அடைத்து வைத்திருந்தனர்.
 ஆனால், காட்டாற்று வெள்ளம் காரணமாக அதைப் பெயர்த்துக்கொண்டு குளத்துக்குள் இப்போது தண்ணீர் வந்துவிட்டது. இருப்பினும் குளத்தில் தண்ணீர் தேங்கினால் தங்களது கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர் என்பது இப்பகுதி மக்களின் பிரதான குற்றச்சாட்டாகும்.
 மாநகராட்சியின் மையப் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்தும் முக்கிய நீராதாரமாக இருக்கும் இக்குளத்தை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 இதுகுறித்து, கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியது:
 ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என உச்ச, உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் கனிராவுத்தர் குளத்தை போலி ஆவணங்கள் மூலமாக பட்டா போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
 இக்குளத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் தான் தேங்குகிறது. குளத்துக்கு வரும் நீர்வழித்தடத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் அடைத்துவைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், தூர்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 குளத்தில் தண்ணீரைத் தேக்கி பாரதி நகர், ரோஜா நகர், முதலி தோட்டம், பெரியசேமூர், சின்னசேமூர், காந்தி நகர், அருள்வேலவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இக்குளத்தைச் சுற்றிலும் சிறுவர் பூங்கா, மூலிகைத் தோட்டம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது:
 மாநகராட்சி நிர்வாகம்
 இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மோகனிடம் கேட்டபோது, "கனிராவுத்தர் குளம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவவுக்குப் பின்னர் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக இதுவரை தகவல் இல்லை. குளத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என 2-ஆம் மண்டல உதவி ஆணையரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.
 மாநகராட்சிக்கு
 சொந்தமானது தான்:
 பொதுப்பணித் துறை அதிகாரி
 கீழ்பவானி வடிநிலக் கோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜுவிடம் கேட்டபோது, "பாசன வசதி பெறும் நீர்நிலைகள் மட்டுமே பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாசன வசதி இல்லாத நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. கனிராவுத்தர் குளத்தில் பல ஆண்டுகளாக பாசன வசதி இல்லாததால் அது மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் தான் உள்ளது' என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com