ஈரோடு மாவட்டத்தில் புதிய தாலுகாக்கள் அறிவிக்கப்படுமா ?

தமிழக பட்ஜெட்டில் ஈரோடு மாவட்டத்தில் புதிய தாலுகாக்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Updated on
2 min read

தமிழக பட்ஜெட்டில் ஈரோடு மாவட்டத்தில் புதிய தாலுகாக்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் என 6 தாலுகாக்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபி, பவானி தாலுகாக்களில் இருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அந்தியூர் தாலுகா உருவாக்கப்பட்டது.

பர்கூர் மலைப் பகுதி மக்கள், அந்தியூர் மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து பவானிக்கு செல்ல வேண்டிய நிலையை மாற்றும் வகையில் அந்தியூர் தாலுகா உருவாக்கப்பட்டது.தமிழகத்தின் மிகப்பெரிய தாலுகாக்களில் ஒன்றாக உள்ள ஈரோடு தாலுக்காவை இரண்டாக பிரித்து புதிய தாலுக்கா அலுவலகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது.

காவிரி கரை பகுதிகளில் வாழும் கிராம மக்கள் வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை பெறுவதற்கு குறைந்தபட்சம் 50 கி.மீ. தூரத்துக்கு மேலாக பயணம் செய்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வர வேண்டிய நிலை உள்ளது. அதே போல சிவகிரி, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்களும் 2 அல்லது 3 பேருந்துகளில் பயணம் செய்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வர வேண்டும்.கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக கவிநிலவு தருமராஜ் இருந்தபோது ஈரோடு தாலுகாவை இரண்டாகப் பிரித்து கொடுமுடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்குவதற்கு மக்களிடம் கருத்துக்களை கேட்கும் வகையில் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால், கொடுமுடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைய வேண்டும் என்று ஒரு தரப்பு பொதுமக்களும், சிவகிரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைய வேண்டும் என்ற மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் ஈரோடு தாலுகாவை பிரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின்போதும் ஈரோடு தாலுகா இரண்டாக பிரிக்கப்படும் என உள்ளூர் அரசியல்வாதிகளால் தொடர்ந்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், இப்போதும் பேச்சளவிலேயே இந்த வாக்குறுதி இருந்து வருகிறது.இப்போதைய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது ஈரோடு தாலுகாவை இரண்டாக பிரிக்கும் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்தார். ஆனால், தலைமை அலுவலகம் கொடுமுடியா, சிவகிரியா என ஆளும் கட்சியினரே பிரச்னையை கிளப்பியதால் புதிய தாலுகா உருவாக்கும் திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

நீதிமன்றம், ரயில் நிலையம், 2,000 ஆண்டு பழமையான கோவில், பிற ஊர்களுக்கு எளிதில் பயணம் செய்ய பேருந்து வசதிகள் உள்ளிட்டவை இருப்பதால், கொடுமுடியை தலைமையாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கருத்து. சிவகிரியை மையமாக வைத்து புதிய தாலுகா உருவாக்கினால் அரச்சலூர், மொடக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் மையப் பகுதியாக இருக்கும் என்பது அப்பகுதி மக்களின் கருத்து.

ஒரு தாலுகா உருவாக்க வேண்டுமெனில் 1.5 லட்சம் மக்கள்தொகை இருந்தாலே போதுமானது. எனவே, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு 2 தாலுகாக்கள் உருவாக்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பொதுவான மக்களின் கருத்து.

தாளவாடியில் புதிய தாலுகா: சத்தியமங்கலம் தாலுகாவை இரண்டாக பிரித்து தாளவாடியை மையமாக வைத்து மேலும் ஒரு தாலுகா உருவாக்கினால் தாளவாடி, கடம்பூர், ஆசனூர் உள்ளிட்ட மலைப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவர் என

பழங்குடி மக்களுக்காக போராடும் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் தங்களது தேவையை நிறைவேற்ற சத்தி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வர வேண்டுமெனில் குறைந்தபட்சம் 6 மணி நேரம் செலவு செய்ய வேண்டிய நிலை இப்போது உள்ளது. இதைத் தவிர்க்க தாளவாடியில் புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ் கூறியது:

ஈரோடு, சத்தி தாலுகாக்களை பிரித்து புதிய தாலுகாக்கள் உருவாக்குவது தொடர்பாக ஏற்கெனவே அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பியுள்ளோம். தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்போது தான் புதிய தாலுகா உருவாக்கப்படுமா என்பது தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com