கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சின்னமான  கொரங்காடுகள் அழியும் அபாயம்: பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

கொங்கு மண்டலத்தில் மட்டுமே காணப்படும் பாரம்பரிய சின்னமாக விளங்கும் கொரங்காடுகள் அழியும் அபாய நிலையில் உள்ளது.
கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சின்னமான  கொரங்காடுகள் அழியும் அபாயம்: பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
Updated on
2 min read

கொங்கு மண்டலத்தில் மட்டுமே காணப்படும் பாரம்பரிய சின்னமாக விளங்கும் கொரங்காடுகள் அழியும் அபாய நிலையில் உள்ளது. இந்தக் காடுகளை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

÷இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும், கால்நடைகள் அரசு அல்லது புறம்போக்கு நிலங்களில் மட்டும்தான் மேய்ச்சலுக்கு கொண்டுச் செல்லப்படுவது வழக்கம். ஆனால், கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் மேய்ச்சலுக்கு பட்டா நிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலங்களில் உள்ள காடுகள்தான் கொரங்காடுகள் என அழைக்கப்படுகிறது.

÷இந்த வகை காடுகள் குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும்தான் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர், மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், தாராபுரம் பகுதிகளிலும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பகுதிகளிலும் இந்த வகை காடுகள் அதிக அளவில் உள்ளன.

÷பொதுவாக, இந்தக் காடுகள் ஓர் ஏக்கர் முதல் 10 ஏக்கர், 20 ஏக்கர் என அதிகபட்சம் 50 ஏக்கர் வரை காணப்படும். இந்தக் காடுகளை சுற்றி செயற்கை வேலிகள் அமைக்கப்படுவதில்லை. இயற்கையான "கிலுவன் முள்' செடிகள்தான் வேலியாக வளர்க்கப்படுகின்றன. இந்தக் காடுகளுக்குள் கால்நடைகள் மேயும்போது உடல் வலுவாகவும், அதிக பால் தரக் கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாகவும் மாறுகின்றன. இந்தக் காடுகளின் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பாரம்பரிய சின்னம் அழிவதுடன், காங்கயம் காளைகளின் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது என்கின்றனர் விவசாயிகள்.

÷இதுகுறித்து சேனாதிபதிபாளையம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கே.எஸ்.எம்.கார்த்திகேயா கூறியது:

÷காங்கயம் காளைகள், பசுக்கள் வளர்ப்புக்கு இந்தக் காடுகள் மிகவும் பயன்பட்டு வருகின்றன. கடந்த 1952-ம் ஆண்டில் கீழ்பவானி கால்வாய் வெட்டப்படுவதற்கு முன்பு அன்றைய ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் (இப்போதைய காங்கேயம், வெள்ளக்கோவில், தாராபுரம்), கரூர் மாவட்டம் ஆகியவற்றில் அதிக பரப்பில் கொரங்காடுகள் இருந்தன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கர், கரூர் மாவட்டத்தில் 40,000 ஏக்கர், கோவை மாவட்டத்தில் 15,0000 ஏக்கர் மட்டும் தான் கொரங்காடுகள் உள்ளன.

÷கடந்த 1990-ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கயம் இன மாடுகள் இருந்தன. 2000-ம் ஆண்டில் 4.44 லட்சமாகக் குறைந்த இந்த வகை மாடுகள், இப்போது 1 முதல் 1.25 லட்சம் மட்டும் தான் இருக்கும் என தெரியவந்துள்ளது.

÷காங்கயம் இன மாடுகள் அழிந்து வருவதற்கு கொரங்காடுகளின் பரப்பு குறைந்தது, ஒரு முக்கியக் காரணம். பொதுவாக இந்த வகை மாடுகள் கொரங்காடுகளில் தான் மேய்ச்சலுக்கு விடப்படும். கொரங்காடுகளில் 24 வகையான மரங்கள், செடிகள், கொடிகள் காணப்படுகின்றன. அதேபோல, வெள்ளைவேலம், கருவேலம், வேப்ப மரம், ஊஞ்சமரம், வாகை மரம் என 7 வகையான மரங்கள் உள்ளன. கால்நடைகளுக்கான கொலுக்கட்டை புல் அதிகமாகக் காணப்படும். ஒற்றை இலை தாரவங்கள் 60 சதவீதமும், இரட்டை இலை தாவரங்கள் 40 சதவீதமும் உள்ளன.

÷சென்னை வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் உள்ள இயற்கை பாதுகாப்பு அமைப்பான கேர் சங்கம் மூலம் அக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த கொரங்காடுகளில் தங்கி ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் தயாரித்துள்ள புகைப்படங்ககளுடன் கூடிய ஆவணத்தில் 80 வகை பறவை இனங்கள், 30 வகை பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

÷இந்தக் கொரங்காடுகள் அரசு ஆவணத்தில் தரிசு நிலங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேய்ச்சல் நிலம் என குறிப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பரியமான கொரங்காடுகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

÷இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது: ஓர் ஏக்கர் கொரங்காடு மேம்பாடு செய்ய 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உழவு ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் ரூ.7,000 செலவாகும். இதில் சோளை, தட்டை, கம்பு போன்ற சிறுதானியங்களும் பயிரிடப்படுகின்றன. கொரங்காட்டை சுற்றிலும் உயிர் வேலி இருக்கும். கிலுவை மரங்களை பயன்படுத்தி வேலி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது சிலர் கம்பி வேலி பயன்படுத்துகின்றனர். உயிர் வேலி மழை பெய்ய மிகவும் உதவிகரமாக இருந்தது. இப்போது கல்லை நடுவது தவறானது. கொரங்காட்டில் கல் நட்டு கம்புவேலி அமைக்கக்கூடாது கொரங்காடுகளை பாதுகாக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.

÷கொங்கு நாட்டின் பாரம்பரிய சின்னமாகவும், இயற்கை வளமாகவும் இருக்கும் கொரங்காடுகளை பாதுகாக்க வேண்டும் என்பது கொங்கு மண்டல விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com