சிமென்ட் விலை உயர்வுக்கு கடிவாளம் : இரட்டை வரி விதிக்கப்படுமா?

சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இரட்டை வரி மூலமாக கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Updated on
2 min read

சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இரட்டை வரி மூலமாக கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 சிமென்ட், இரும்புக் கம்பிகள் ஆகியவை கட்டடம் கட்டுவதற்கு முக்கியமான மூலப் பொருள்களாகும். கட்டுமான செலவில் 30 சதவீதம் சிமென்ட்டுக்கு செலவாகிறது.

ஆனால், சிமென்ட் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டுவது பகல் கனவு போலாகி வருகிறது.

 கடந்த சில மாதங்களுக்கு முன் சிமென்ட் ஒரு மூட்டை ரூ. 240-க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக தற்போது ரூ. 390 வரை உயர்ந்துள்ளது.

சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள், நிலக்கரி, டீசல் போன்றவற்றின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் சிமென்ட் விலை உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணம் சிமென்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் சின்டிகேட் அமைத்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வேண்டுமென்றே விலையை உயர்த்துகின்றன என்பது

கட்டுநர்கள் மற்றும் கட்டடப் பொறியாளர்களின் குற்றச்சாட்டு.

 பாகிஸ்தான், சீனாவில் இருந்து சிமென்ட்டை இறக்குமதி செய்து விநியோகம் செய்தால் ஒரு மூட்டை ரூ. 220-க்கு கிடைக்கும். ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்ய ரூ.

150 தான் செலவாகும். ஆனால், கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக சிமென்ட்டை இறக்குமதி செய்யவும் ஆலை நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் சிமென்ட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் அல்லது சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்க

வேண்டும் என்று கட்டுமானத் துறையினர் வலுவாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

 இதுகுறித்து, தமிழ்நாடு கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் அறக்கட்டளைத்  தலைவர் ஆர்.மோகன்ராஜ் கூறியது:

 ஒரு மூட்டை சிமென்ட் விலை (50 கிலோ) 2006-ஆம் ஆண்டில் ரூ. 135-ஆகவும், 2007-இல் ரூ. 215-ஆகவும், 2008-இல் ரூ. 250-ஆகவும், 2011-இல் ரூ. 280-ஆகவும், 2012-இல் ரூ.

340-ஆகவும் உயர்ந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து 2014-இல் ரூ. 240-க்கு விற்பனையான சிமென்ட் தற்போது ரூ. 390-ஆக உயர்ந்துள்ளது.

 சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் வீடு கட்டும் கனவு பகல் கனவாகிவிட்டது.

எனவே, இப்பிரச்னையில் அரசு உடனடியாகத் தலையிட்டு சிமென்ட் விலையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

 இதுகுறித்து, இந்திய கட்டுநர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் யுஆர்சி.தேவராஜன் கூறியது:

 இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10 சதவீதமும், தமிழகத்தில் 25 சதவீதமும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிமென்ட்

விலையை அபரிமிதமாக உயர்த்தினால், கட்டுமானப் பணிகள் முடங்கி, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு சதுர அடிக் கட்டுமானத்துக்கு அரை மூட்டை சிமென்ட்

தேவைப்படும். இப்போது சிமென்ட் விலை உயர்ந்துள்ளதால் ஒரு சதுர அடிக்கு ரூ. 100 செலவு உயர்ந்துள்ளது. இதனால், வீடு கட்டுவோர், கட்டுமானத் தொழிலில்

ஈடுபட்டுள்ளோர், ஒப்பந்ததாரர்கள் என அனைத்து தரப்பினரும்

பாதிக்கப்பட்டுள்ளனர். சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த கட்டுமானப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்ய தனி ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கவேண்டும்.

இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

"அதிர்ச்சி வைத்தியம் தேவை'

 இதுகுறித்து, ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில்வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் கூறியது:

 கடந்த முறை அதிமுக ஆட்சி இருந்தபோது 2003-இல் ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 135-ஆக இருந்த போது, ஆலை நிர்வாகத்தினர் திடீரென இருமடங்கு விலையை

உயர்த்திவிட்டனர். அப்போது சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதித்து முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, ஒரு மூட்டை ரூ. 135-க்கு மேல்

விற்பனை செய்யும் சிமென்ட்டுக்கு இரட்டை வரி விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிமென்ட் ஆலை நிர்வாகத்தினர் விலையை உடனடியாகக் குறைத்தனர்.

அதுபோல, மீண்டும் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com