நற்குணங்களை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும்: சுவாமி குருபரானந்தர் பேச்சு
By DIN | Published On : 26th December 2016 09:18 AM | Last Updated : 26th December 2016 09:18 AM | அ+அ அ- |

நற்குணங்கள் எவை என்ற இலக்கை நிர்ணயித்து, அதை அடையும் முயற்சியில் ஈடுபட்டால் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்று சுவாமி குருபரானந்தர் பேசினார்.
எஸ்கேஎம் உடல் மற்றும் மனநல அறக்கட்டளை சார்பில் ஆன்மிகச் சொற்பொழிவு ஈரோடு கொங்கு கலையரங்கில் சனிக்கிழமை மாலை தொடங்கியது. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எஸ்கேஎம் மயிலானந்தன் வரவேற்றார். சொற்பொழிவில் பகவத்கீதையின் 16, 17-ஆவது அத்தியாயத்தை விளக்கி சுவாமி குருபரானந்தர் பேசியதாவது:
வேதாந்தங்களைப் படித்து, அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டுமானால் நற்பண்புகள் இருந்தால் மட்டுமே முடியும். தெய்வீக குணங்கள் எங்கு உள்ளதோ அவர்களால்தான் வேதாந்தத்தின் மையக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடியும். நாம் எவ்வளவு உபநிஷத்துக்களை படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, அதில் உள்ள நல்ல கருத்துகளை எப்படி பின்பற்றுகிறோம் என்பதே முக்கியம். தெய்வீக குணங்களை பெருக்கி, அசுர குணம் நீக்கினால்தான் உபநிஷத்துக்களின் கருத்துகள் புரியும்.
பகவத்கீதை புண்ணியத்திற்காகப் படிப்பதல்ல, அதை புரிந்துகொண்டு அதன் கொள்கைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியம். இதையே நம்முடைய வீட்டுப் பாடமாக பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.
நற்குணங்கள் எவை என்ற இலக்கை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் ஈடுபட்டால் கட்டாயம் வெற்றி பெற முடியும். அசுர குணம், தெய்வீக குணம் பற்றி புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். மற்றவர்களை குறை கூறுவது அசுர குணம் என்று கீதை கூறுகிறது. ஜீவித்திருக்கும் வரை, உலகம் உன்மயமாகும் வரை போராட வேண்டும். போராடி நற்குணங்களை அடைய வேண்டும். ஒருசில காரியங்கள் கடைசியில்தான் பலன் கிடைக்கும். ஆனால், நற்குணங்களால் ஒவ்வொரு நாளும் பலன் கிடைக்கும். தியானம் செய்தால் கண்ணுக்குத் தெரியாத நற்பலன்கள் கிடைக்கும். நற்குணங்கள் பெருகினால் அன்றாடம் பலன் அடைய முடியும் என்றார்.
டிசம்பர் 30-ஆம் தேதி வரை தினமும் காலை 7 முதல் 8 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் இந்த சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. மாண்டுக்ய உபநிஷத் குறித்த சொற்பொழிவு காலையிலும், பகவத்கீதை தொடர்பான சொற்பொழிவு மாலையிலும் நடைபெறுகிறது.