புதிய உயர்மட்ட மேம்பாலம் திண்டல் வரை விரிவுபடுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

புதிய உயர்மட்ட மேம்பாலம் திண்டல் வரை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

புதிய உயர்மட்ட மேம்பாலம் திண்டல் வரை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவர் பேசியதாவது:
இங்கு மேம்பாலம் அமைப்பதால் ஈரோட்டுக்கு பெருந்துறை, காங்கயம், பழனி, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடையின்றி சென்று வர பயனுள்ளதாக அமையும்.
இந்த மேம்பாலம் பிரப் சாலை, பெருந்துறை மார்க்கத்தில் இருவழித் தடமாகவும், தாராபுரம் மார்க்கத்தில் இடைவழித் தட பாலமாகவும் அமைக்கப்பட உள்ளது.
இச்சந்திப்பில் 30 மீட்டர் விட்டம் கொண்ட ரோட்டரி அமைத்து, நீரூற்று, இயற்கை நிலக் காட்சி அமைத்து மேம்பாடு செய்யப்பட உள்ளது.
ஈரோடு - பெருந்துறை சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள சாலை. விழாக் காலங்களிலும், திருமண நாள்களிலும் வாகனங்கள் அதிகமாக செல்லும் காரணத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. ஆகவே, உயர்மட்டப் பாலத்தை திண்டல் வரை விரிவுபடுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆகவே, இப்போது அரசு மருத்துவமனைக்கு அருகில் கட்டப்பட உள்ள பாலத்தில் இருந்து, எவ்வளவு தூரம் பாலம் வேண்டுமோ, அவ்வளவு தூரம் உயர்மட்டப் பாலம் அமைத்துக் கொடுக்கப்படும்.
அதேபோல, ஈரோடு - பெருந்துறை சாலையில் இருந்து, ஈரோடு - கோபியை இணைக்கும் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே, திண்டலில் இருந்து கனிராவுத்தர் குளத்தை இணைக்கும் சாலை விரிவுபடுத்தப்படும்.
மேலும், கோபியில் புறவழிச் சாலை, மொடக்குறிச்சி தொகுதியில் பேருந்து நிலையம், பவானியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டம்: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 484.54 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கருப்பணன், மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம், ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி. செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), உ.தனியரசு (காங்கயம்), மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், மாநகராட்சி ஆணையர் எம்.சீனி அஜ்மல்கான் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அணியில் முன்னாள் மேயர்
ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் அணிமாறி இணைந்தார்.
முதல்வர் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கட்சிப் பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com