ஈரோடு மின்பகிர்மான வட்டம் சார்பில் மின்தடை புகார், பிற புகார்களைத் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1912 புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மின்வாரிய தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆட்சியர் எஸ்.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் மின் இணைப்பு உள்ள மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது. மலைப் பகுதியான தாளவாடி ஒன்றியத்தில் ராமர் அணையில் 18 வீடு, மல்லியம்மன் துர்க்கையில் 126 வீடு, கத்திரிமலையில் 86 வீடுகளுக்கு மட்டுமே மின்சார இணைப்பு வழங்க முடியவில்லை.
அம்மலைகளுக்கு வாகனம் செல்லவும், மின்பாதை அமைக்கவும் வசதி இல்லை. இதனால், அங்கு ஒவ்வொரு வீட்டுக்கும் சோலார் பேனல் அமைத்து, 12 வோல்ட் பேட்டரி மூலம் தலா 5 வாட்ஸ் மின் விளக்கு 3 இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒயரிங் பணி வழங்கி அனைத்து வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கியதால் 100 சதவீதம் மின்சார வசதி அளித்த தன்னிறைவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ஈரோட்டில் மின்தடை நீக்க சேவை மையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும். மின்தடை ஏற்பட்டதும் இலவச அழைப்பான 1912 என்ற எண்ணில் இணைப்பு எண்களைத் தெரிவித்தால் ஓரிரு மணி நேரத்தில் மின்தடை சீரமைக்கப்படும்.
தனிநபர் மின்தடை புகார் காலை 8 முதல் மாலை 6 மணி வரை சீர்செய்யப்படும். பிற புகார்களை 94458-51912 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தெரிவிக்கலாம். ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட மக்கள் இச்சேவையைப் பெறலாம் என்றார்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் பொறுப்பேற்கவுள்ள புதிய ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.