கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கடந்த 25 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றிய 2 மாநகராட்சி ஊழியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், உதவி ஆணையர்கள் சண்முகவடிவு, மாரிமுத்து, விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈரோடு சம்பத்நகரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி என்.உமா மகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், முதலாவது  கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் பி.மோகன், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்துறை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமையில், மண்டலத் தலைவர்கள் வி.கா.மணியன், சாம்ராட் அசோக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஈரோடு புதுமை காலனி, சங்கு நகர் ஆகிய பகுதிகளில்  நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக பொருளாளர் பாஜீலூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி: கல்லூரி முதல்வர் கு.உதயகுமார் தலைமை வகித்து  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். இதையொட்டி  நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தேசிய மாணவர் படை அலுவலர்  மகுடீஸ்வரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சோபியா, சரவணன், குருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேளாளர் மகளிர் கல்லூரி: 
விழாவுக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் எஸ்.பி.விஸ்வநாதன் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதில், கல்லூரி இணைச் செயலர் செ.நல்லசாமி, முதல்வர் மரகதம், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கே.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலைமகள் கல்வி நிலையம் பள்ளி: தலைமை ஆசிரியை  இந்திராணி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.  மெட்ரிக் பள்ளி பெற்றோர் சங்கத் தலைவர் டாக்டர் ஆ.ராஜா முன்னிலை வகித்தார். மேல்நிலைப் பள்ளித் தலைவர் பாஸ்கர், மெட்ரிக் பள்ளி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தினர். மாணவிகள் சுதந்திர தின விழா குறித்துப் பேசினர்.
பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி: கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாக அலுவலர் சிவானந்தவல்லபன் தேசியக் கொடியேற்றி வைத்தார்.  கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிக்கப்பட்டது.
மாநகராட்சிப் பள்ளி: ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் உள்ள  மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தர்மசிவம் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இணைச் செயலாளர் சி.கதிர்வேல், துணைத் தலைவர் சாமிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதையொட்டி  நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு கேலக்சி ஜே.சி.ஐ. மகளிர் பிரிவு தலைவி தன்யா முரளி பரிசுகள் வழங்கினார்.
ஈரோடு திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே.ராஜா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மும்தாஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஆனந்தவள்ளி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னிமலை, எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி: கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி ஆலோசகர் எம்.வி.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார்.  முதல்வர் பி.செங்குட்டுவன் வரவேற்றார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கருமாண்டிசெல்லிபாளையம்
பேரூராட்சியில்...  
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கொடுமுடியில்...
கொடுமுடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர், கொடுமுடி நிலவருவாய் ஆய்வாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொடுமுடியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், நீதிபதி குமாரவர்மன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், கொடுமுடி நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
கொடுமுடியில் சுதந்திர தினத்தையொட்டி மகுடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விழாவுக்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து, சமபந்தியில் கலந்துகொண்டார். இதில் கொடுமுடி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் புதூர் கலைமணி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் சி.சரவணன், வழக்குரைஞர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மொடக்குறிச்சியில்...
அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி தேசியக் கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.
அவல்பூந்துறை அரசு தொடக்கப் பள்ளியில் திருமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பி.கதிர்வேல், அவல்பூந்துறை ஏ.பி.டெக்ஸ் தலைவர் பூவைதமிழன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.
 இதில், அவல்பூந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பிரணவவர்மன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கொற்றவேல் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாகர் பள்ளியில்...
பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, சாகர் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கே.ராமசாமி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  
விழாவில், அறக்கட்டளைத் துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் எஸ்.கே.பழனிசாமி, இணைச் செயலர் கே.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொங்கு பள்ளியில்...
பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் ஜி.யசோதரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 
தாளாளர் டி.என்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் எம்.முருகன் வரவேற்றார்.  இதில், பள்ளித் துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நவரசம் பள்ளியில்...
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் எஸ்.சி. துரைசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில், செயலாளர் சி.குமாரசாமி, பொருளாளர் பி.சிவகுமார், கல்லூரித் தலைவர் டி.கே. தாமோதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மொடக்குறிச்சியை அடுத்த சாமிநாதபுரம் ஸ்ரீ வேதாத்திரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் சக்திவேல் கொடியேற்றி வைத்து மாணவ, மாணவியருக்கு  இனிப்புகள் வழங்கினார்.

சுவாமி விவேகானந்தா பள்ளியில்...
பெருந்துறை சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைவர் சின்னசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தாளாளர் சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி பொருளாளர் மாணிக்கமூர்த்தி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். தொடர்ந்து, கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com