எஸ்.கே.எம். தீவனத் தொழிற்சாலைக்கு மூலப் பொருள்களைஇறக்க ரயில்வே துறை சிறப்பு அனுமதி: ஆலை நிர்வாகம் தகவல்

ஈரோடு எஸ்.கே.எம். தீவனத் தொழிற்சாலைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் மூலப் பொருள்களை இறக்க ரயில்வே துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக ஆலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

ஈரோடு எஸ்.கே.எம். தீவனத் தொழிற்சாலைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் மூலப் பொருள்களை இறக்க ரயில்வே துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளதாக ஆலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த ஆலையின் மனிதவள மேம்பாட்டுத் துறை துணைப் பொது மேலாளர் கே. ராஜேந்திரன் வெளியிட்ட தகவல்:
 ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில் எஸ்.கே.எம்.  கால்நடை தீவனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்குத் தேவையான தீவனங்கள்  நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  
 இந்தத் தொழிற்சாலைக்கு தீவன உற்பத்திக்காக மூலப் பொருள்கள் வட மாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலும் சரக்கு ரயில்கள் மூலமாகவே கொண்டு வரப்படுகின்றன. ஈரோடு ரயில் நிலைய சரக்குகள் கையாளும் பிரிவில் இறக்கி வைக்கப்படும் இந்த மூலப் பொருள்கள் அங்கிருந்து லாரிகள் மூலம் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதனால், காலதாமதம், போக்குவரத்து நெரிசல் போன்ற சிரமங்கள் நீடிப்பதைக் கருத்தில் கொண்டு தொழிற்சாலை நிர்வாகம்  நஞ்சை ஊத்துக்குளி அருகே உள்ள சாவடிப்பாளையம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் இருந்து  இறக்குவதற்கு வசதியாக நடைமேடை, லாரிகள் சென்று வரும் வகையில் தார் சாலை ஆகியன ரயில்வே துறையின் அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
 இதைத்தொடர்ந்து, புதன்கிழமை ரயிலில் வந்த சரக்கு இறக்கும் பணி தொடங்கியது. அதில், தீவனம் தயாரிக்க சுமார் 2,500 டன் சோயாவை ரயிலில் இருந்து எஸ்.கே.எம். நிறுவனத்தின் தொழிலாளர்கள் இறக்கி லாரி மூலம் தொழிற்சாலைக்குக் கொண்டு சென்றனர்.
 இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் சாவடிப்பாளையம் ரயில் நிலையத்துக்குச் சென்று அப்பணிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது.
 இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தொழிற்சாலை நிர்வாகிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ரயில்வே துறையினர் அளித்துள்ள முறையான அனுமதி உத்தரவைக் காண்பித்து விளக்கமளித்ததைத் தொடர்ந்து  ஈரோட்டில் இருந்து சென்ற சுமைதூக்கும் தொழிலாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com