உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ப.கனகசபாபதி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ப.கனகசபாபதி கூறினார்.
Published on


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ப.கனகசபாபதி கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
370 ஆவது சட்டப் பிரிவு ரத்து என்பதை பாஜக கடந்த காலத்தில் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் தொடந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் மோடி இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இந்த சட்டப் பிரிவு நீக்கத்துக்கு மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஏற்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி என்பது உலக அளவிலான பிரச்னையாக உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் உள்ளது. 2013 காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடுகையில் இப்போது விலைவாசி மிகவும் குறைவாகவே உள்ளது. வெளியுறவு விவகாரத்தில் மோடி ராஜ தந்திரத்துடன் செயல்படுகிறார். அவருடைய அமெரிக்க பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் நகைக் கடனுக்கான வட்டி மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. 
தமிழகத்தில் பாஜக வலுவாக இல்லை என்பதை ஏற்கிறோம். அதே சமயத்தில் விலக்கி வைக்க கூடிய நிலையில் எங்கள் கட்சி இல்லை. சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, பாஜகவை அணுகாதது குறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தமிழக பாஜக தலைவரை அமித்ஷா விரைவில் அறிவிப்பார் என்றார்.
இதைத் தொடர்ந்து, அவர் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தொழில் மேம்பாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஈரோடு மாவட்டத்தில் முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டார். முன்னதாக, அவர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  
பேட்டியின்போது, ஈரோடு பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன், மாநில பிரசார அணி பொறுப்பாளர் எ.சரவணன், மாவட்டச் செயலாளர் எ.பி.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com