அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை: ஜூன் 30-க்குள் 2 ஜோடி வழங்கத் திட்டம்
By DIN | Published On : 01st April 2019 08:52 AM | Last Updated : 01st April 2019 08:52 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. இதற்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை மற்றும் கூட்டுறவு சங்கம் சார்பில் நூல், துணி தயாரித்து, சமூக நலத் துறைக்கு வழங்கப்படும்.
அத்துறையின் கீழ் உள்ள மகளிர் தொடக்க தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகள் தைக்கப்படும். சீரூடை தயாரிக்க மாநில அளவில் 5.50 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் ஈரோட்டில் மட்டும் 2.25 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு வரை ஆட்டோ கிரீன், மிடோ கிரீன், மெரூன், லைம் சேன்டல் வண்ணத்தில் ஆடைகள் தயாரிக்கப்பட்டன. வரும் கல்வி ஆண்டில் கிளிப்பச்சை, ஊதா, கிரே, வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, ஊதா வண்ண அரைக்கால் சட்டை, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பிரவுன், வெள்ளை, மெரூன், சிசென்ட், சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டை, சந்தன கலர் பேண்ட் வழங்கப்படும்.
அதுபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவியருக்கு கிரீன் கலர் பாவாடை, நான்கு வண்ண சட்டை, 6 முதல் 8 வரையிலான மாணவியருக்கு பிரவுன் ஸ்கர்ட், சந்தன வண்ண கோட் வழங்கப்படும்.
இதில் கோட்டுக்கு ரூ.43.95, சட்டை, டிரவுசருக்கு ரூ.17.58, பாவாடைக்கு ரூ.13.10 சுடிதார் செட்டுக்கு ரூ.43.95 கட்டணமாக வழங்கப்படும். தினமும் 3 முதல் 4 லட்சம் ஆடைகள் தைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இதில் ஈரோட்டில் உள்ள துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 38.16 லட்சம் மீட்டர், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 60.86 லட்சம் மீட்டர், மாணவியரின் பச்சை, சந்தன கோடு துணி, 27.65 லட்சம் மீட்டர், மாணவியருக்கான கோட் துணி 27.65 லட்சம் மீட்டர், கோட் துணி 37.35 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு, ஆடையாக மாறி வருகிறது.
வரும் ஜூன் 30-க்குள், அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜோடி சீருடை வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.