குடியிருப்புப் பகுதியில் புகுந்த ஒற்றை யானை
By DIN | Published On : 01st April 2019 08:52 AM | Last Updated : 01st April 2019 08:52 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.
வனப் பகுதியில் போதிய தீவனமும், தண்ணீரும் இல்லாததால் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து வருகின்றன. இந்நிலையில், பர்கூரில் உள்ள ராஜன் (40) என்பவர் தனது வீட்டில் சனிக்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்து பார்க்கும்போது ஒற்றை யானை வீட்டின் கூரையை சேதப்படுத்தி கொண்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜன் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனே அருகில் வசித்தவர்கள் விரைந்து வந்து சப்தம் எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் யானை விரட்டினர். யானை தாக்கியதில் வீட்டின் மேற்கூரை சேதமானது.
வன விலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறுவதைத் தடுக்க வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.