விபத்துகளைத் தடுக்க திம்பம் மலைப்பாதையில் சூரிய சக்தியில் இயங்கும் ஒளிரும் மின்விளக்குகள்
By DIN | Published On : 01st April 2019 08:50 AM | Last Updated : 01st April 2019 08:50 AM | அ+அ அ- |

திம்பம் மலைப் பாதையில் விபத்துகளைத் தடுக்க சூரிய சக்தியில் இயங்கும் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலத்துக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மலைப்பாதையில் ஆங்காங்கே சூரிய சக்தியில் இயங்கும் ஒளிரும் வகையிலான மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப்பாதையில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளில் 3 மின் விளக்குகள் வீதம் 71 விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சூரிய சக்தியில் கிடைக்கும் மின்சாரத்தை இரு நாள்வரை பேட்டரியில் சேமித்து இயக்குவதால் மழைக்காலங்களில் கூட தடையில்லாமல் மின் விளக்குகள் ஒளிரும். இந்த மின்விளக்குகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் விபத்துகள் குறையும் வாய்ப்பு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.