சமுதாய வாக்குகளைக் குறிவைக்கும் வேட்பாளர்கள்: வாக்குகள் வசப்படுமா?

ஈரோடு மக்களவைத் தொகுதியில் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து சில வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து சில வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
14.27 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஈரோடு மக்களவைத் தொகுதியில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் (தனி), நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் ஆகிய தொகுதிகள் உள்ளன. 
 ஈரோடு தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சமுதாய வாக்குகளை குறிவைத்துப் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் உள்ளனர். இதனால் பெரும்பாலும் இந்தக் கட்சிகள் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களையே களமிறக்குகின்றன. ஈரோடு மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளிலும் இந்தத் தொகுதியில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள கொங்கு வேளாளக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே போட்டியிடுகின்றனர்.
 தவிர ஆதிதிராவிடர் சமுதாய வாக்குகளை குறிவைத்து பகுஜன் சமாஜ் கட்சியும், அருந்ததியர் வாக்குகளை குறிவைத்து இந்திய கணசங்கம் கட்சியும் களமிறங்கியுள்ளன. 
 செங்குந்தர் மகாஜன சங்கம் என்ற அமைப்பின் மூலம் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அ.அருணாசலம், இத்தொகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் உள்ள முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
 சமுதாய வாக்குகள் சிதறுமா? சமுதாய வாக்குகளை நம்பி களமிறங்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாது என்றாலும், பிரதான கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கச் செய்ய முடியுமா என்ற கேள்வியை சமுதாய தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள் சிலரிடம் முன்வைத்தபோது அவர்கள் கூறியதாவது:
 ஈரோடு மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 25 முதல் 30 சதவிகிதம் வரை கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகள் உள்ளன. 20 முதல் 25 சதவீதம் வரை தலித் சமுதாயத்தினர் வாக்குகள் உள்ளன. தலித் சமுதாயத்தில் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமுதாய வாக்குகள்தான் அதிகம். சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை முதலியார் சமுதாய வாக்குகள் உள்ளன.
 வன்னியர்,  நாடார், உடையார் உள்ளிட்ட பிற இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய வாக்குகள் சுமார் 25 சதவிகிதம் உள்ளன.
 சமுதாய வாக்குகளை குறிவைத்துப் போட்டியிட்ட பலரும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதும் கூட வெற்றிபெற முடியவில்லை. கடந்த 2001 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பவானி தொகுதியில் திமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈரோடு மாவட்ட மக்களுக்கு நன்கு அறிமுகமான மறைந்த ஜெ.சுத்தானந்தன் 31,456 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
 அதே சமயத்தில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சமுதாயம் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்தப்படாமல் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
 அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தோல்வியடைந்தார். சமுதாய அடையாளத்தில் போட்டியிட்டவர்களில் கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு மட்டும்தான் 2 முறை வெற்றிபெற்றார். அதற்கு காரணம் அப்போதைய அரசியல் சூழலைப் பொருத்து அவர் எடுத்த முடிவு. அதிமுக கூட்டணியில் இருந்த உ.தனியரசு 2011 தேர்தலில் பரமத்திவேலூர் தொகுதியிலும், 2016 தேர்தலில் காங்கயம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.   
கூட்டணியால் பிரதான கட்சிகளுக்குப் பலன்: இந்தத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையேதான் போட்டி என்ற நிலை உள்ளது. சமுதாய கட்சிகளான கொமதேக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக அணியிலும், அதிமுக அணியில் பாமக, கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
 அனைத்து சமுதாயத்திலுமே 5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் சமுதாய கட்சிகள் வாக்குகளை வைத்துள்ளன. இந்த வாக்குகளும் பிரதானக் கட்சிகளுடன் கூட்டணி சேரும்போது அங்கு சென்றுவிடுகின்றன. கூட்டணியை ஏற்காதவர்களின் 1 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை வேண்டுமானால் சமுதாய அடையாளத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற முடியும். அதற்கும் வலுவான பிரசாரம் இருக்க வேண்டும். 
  ஈரோடு மக்களவைத் தொகுதியில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் கட்சி சார்பில் போட்டியிடவில்லை. இதனால் அந்த சமுதாய வாக்குகளை குறிவைத்து அமைப்பின் பெயரில் ஓய்வுபெற்ற பேராசிரியர் களமிறங்கி இருக்கலாம். முதலியார் சமுதாயத்துக்கு ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, காங்கயம், குமாரபாளையம் தொகுதிகளில் சுமார் 20 சதவீதம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்கு வங்கி அதிமுக, திமுகவுக்கானதாக உள்ளது. இந்த வாக்குகளை அருணாசலம் வசப்படுத்திக்கொள்வாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும். 
 இதேபோல சமுதாயம் சார்ந்த கட்சிகள் தனியாகப் போட்டியிடாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எம்.கோபால், ஆதிதிராவிடர் சமுதாய வாக்குகளையும், இந்திய கண சங்கம் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அருந்ததியர் சமுதாய வாக்குகளையும் ஈர்ப்பார்களா என்பதும் தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.
 ஒவ்வொரு தேர்தலிலும் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து சிலர் களமிறங்குவது வாடிக்கை. சமுதாய வாக்குகள் சில தேர்தல்களில் பிரதானக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் சுமார் 15 தொகுதிகளில் திமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கொமதேக வாக்குகளைப் பிரித்ததே கொங்கு மண்டலத்தில் திமுக படுதோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திமுகவின் ஆட்சிக் கனவும் தகர்ந்தது.
 இந்தத் தேர்தலில் சமுதாய கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் இரண்டு கூட்டணிகளுக்குமான வாக்குகள் அனைத்து சமுதாயத்திலும் 1 சதவீதம் அளவுக்கு கூட சிதற வாய்ப்பில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com