உடலை துண்டு துண்டாக வெட்டி பிகார் இளைஞர் கொலை: பெண் உள்பட 3 பேர் கைது
By DIN | Published On : 11th April 2019 08:15 AM | Last Updated : 11th April 2019 08:15 AM | அ+அ அ- |

ஈரோட்டில் உடலை துண்டு துண்டாக வெட்டி பிகார் இளைஞரை கொலை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பிகார் மாநிலம், கிழக்கு சாம்பரன் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிண்டோஸ். இவரது மகன் நித்திஷ்குமார் (21). இவர், திண்டுக்கல் மாவட்டம், கோட்டநத்தம் பகுதியில் உள்ள தனியார் மினரல் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தார்.
இவர் அவ்வப்போது ரயிலில் பிகார் சென்று வரும்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த வைசாலி, காஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நவீன்குமார் ஈரோடு, ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பிளீச்சிங் பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் நித்திஷ்குமார் அடிக்கடி ஈரோடு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், நித்தீஷ்குமாரை கடந்த 7ஆம் தேதி முதல் காணவில்லை என திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர் ராஜ்குமார் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நித்திஷ்குமாரைத் தேடி வந்தனர்.
இதனிடையே நித்தீஷ்குமாரை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி நித்தீஷ்குமார் தாயார் ரேணுதேவியிடம் செல்லிடப்பேசியில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்தும் திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், செல்லிடப்பேசியில் பேசிய மர்ம நபர்கள், ஈரோடு, ராசாம்பாளையத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து வீரப்பன்சத்திரம் போலீஸ் உதவியுடன் ராசாம்பாளையம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நவீன்குமார் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்ததில் வீட்டில் நித்திஷ்குமார் உடல், கை, கால்கள், தலை என துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் நித்திஷ்குமாரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நவீன்குமார், அவரது மனைவி சசிகலா (22), அஸ்ஸாம் மாநிலம், குவாண்டி பகுதியைச் சேர்ந்த ராகுல் தத்தா (22) ஆகிய 3 பேரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.