குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
By DIN | Published On : 17th April 2019 08:32 AM | Last Updated : 17th April 2019 08:32 AM | அ+அ அ- |

பவானி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை அருகேயுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தண்ணீர் தேவைக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பவானி - மேட்டூர் சாலையில் குதிரைக்கல்மேடு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...