ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
By DIN | Published On : 17th April 2019 08:34 AM | Last Updated : 17th April 2019 08:34 AM | அ+அ அ- |

பெருந்துறையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் அண்மையில் மீட்டனர்.
இதுகுறித்து பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் செயல் அலுவலர் பா.குழந்தைவேல் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேருந்து நிலையம் அருகே செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமாக 10.87 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கடைகள், வீடுகள், காலியிடம் என 39 பேர் வாடகைக்கு உள்ளனர். கடந்த 2013 இல் நிலத்தின் மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கு உடன்படாத குமாரசாமி என்பவர் அரசு நிர்ணயம் செய்த தொகையை வழங்காமல் இடத்தையும் காலி செய்யாமல் நீதிமன்றத்துக்கு சென்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் முடிவு கடந்த வாரம் வெளியானது. அதில் 2013 இல் இருந்து இதுவரை செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும். குமாரசாமி ஆக்கிரமித்துள்ள 33,938.19 சதுர அடி நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தா.நந்தகுமார், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைத்து, கோயிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு வைத்தனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...