"18, 28% வரி விதிப்பைக் கைவிட வேண்டும்'
By DIN | Published On : 06th February 2019 06:44 AM | Last Updated : 06th February 2019 06:44 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், ஈரோடு மாவட்ட வணிகர்களின் விவரங்கள் குறித்த தொகுப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வணிகர்களின் தொகுப்பை வெளியிட்டுப் பேசியதாவது:
மத்திய அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வணிகர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கவில்லை. மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள 14 பொருள்களையும் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் .
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களை தண்டிப்பதற்கு பேரமைப்பின் உதவியை நாட வேண்டும். அவர்களுக்கு முழு உதவியும் பேரமைப்பு செய்யும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்று கடையை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு பேரமைப்பு முழு ஒத்துழைப்பு அளித்து கடன் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளும். அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு முழு ஆதரவு தர வேண்டும். வணிகர் சங்கங்களின் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா பேசியதாவது:
18, 28 சதவீத வரி விதிப்பை அறவே அகற்றப்பட வேண்டும். திருப்பி செலுத்தக் கூடிய வகையில் நிலுவையில் உள்ள 93 ஆயிரம் கோடி உள்ளிட்ட வரிப் பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ரூ. 5 லட்சம் வரை முழுமையாக வரிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும். 60 வயதைக் கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
எந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்தக் கட்சிக்குத்தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு அத்துமீறி கடைகளில் புகுந்து வணிகர்களை மிரட்டி வரும் அதிகாரிகள் தங்களது தவறை நிறுத்திக் கொள்ளாவிடில் வணிகர்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் பகுதி அனைத்து வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...