சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி செயலிகளைத் அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் ஆர்.வடிவேலு தலைமையில் அளித்துள்ள மனு:
சமூக வலைதளங்களில் சீன நாட்டை சார்ந்த பைட்- டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிக் டாக் செயலியில் 15 விநாடிகளுக்குள் தங்களின் கருத்தை படம் பிடித்து வெளியிட முடியும்.
இதனை பயன்படுத்துபவர்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபாசத்துடன் ஆடல், பாடல்கள் மற்றும் நடனத்துடன் ஆபாசக் கருத்துகளைப் பதிவு செய்து வெளியிட்டு வரும் நிலை அதிகரித்துள்ளது.
இதைப் பயன்படுத்த எவ்வித கட்டுப்பாடோ தணிக்கையோ இல்லை. ஆபாசம் நிறைந்த பாடல்களை பாடுவதும், திரைப்படங்களில் வரும் பாடலுக்கு ஏற்ற வகையில் அங்க அசைவுகள் போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதில் இடம் பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன. உலகில் பெரும்பாலான நாடுகளில் டிக் டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகள் இளம் தலைமுறையினரிடம் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கிடையே பாதிப்பு ஏற்படுத்தியதால் இந்தோனேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 16 வயதிற்குள்பட்டவர்கள் இதனை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் இளைய தலைமுறையினர் குறிப்பாக குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் டிக் டாக் மற்றும் மியூக்கலி செயலிகளை தாமதமின்றி தடை செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: இதுகுறித்து கஸ்பாபேட்டை பகுதி மக்கள் அளித்த மனு:
மொடக்குறிச்சி தாலுகா கஸ்பா பேட்டையில் ஸ்ரீ சத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 21.5 ஏக்கர் நிலம் கீழ்பவானி பாசன ஆயக்கட்டுக்கு சார்ந்த விவசாய நிலமாக உள்ளது. இது இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் இந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். இதில், 3 ஏக்கர் விவசாய நிலம் அரசு மூலமாக தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த நிலத்தில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டுவதற்காக தேர்வுசெய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து குடிசை மாற்று வாரிய பணிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரம்மதேசம் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்க கூடாது: இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனு:
அந்தியூர்- ஆப்பகூடல் செல்லும் பிரம்மதேசம் பகுதியில் தற்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன. டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடை பணியை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு: இதுகுறித்து முத்தம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனு:
ஈரோடு, முத்தம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் பழைய குப்பை கழிவு கிடங்கு அமைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பகுதியில் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் காற்று, நிலத்தடி நீர் மாசடைவதோடு பல விதமான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு அமையவிருக்கும் கழிவு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: இது குறித்து பொதுமக்கள் அளித்த மனு,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், எலந்தக்கோட்டை மற்றும் பல்லகாபாளையம் செளதாபுரம் ஆகிய கிராமங்களில் சாய ஆலைகள், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளதால், நேரடியாக காவிரி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லகாபாளையம் பகுதியில் கிரீன் என்விரான்மென்ட் அசோசியேஷன் சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் அரசு நிதி உதவியோடு அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை அனுமதிபெற விண்ணப்பித்துள்ளது. அதே போல பெதக்காட்டூரில் குமாரபாளையம் கிரீன் காவேரி டையிங் கிளாஸ்டர் என்ற அமைப்பு சுமார் 25 சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக அரசு அனுமதி வேண்டி கைத்தறி மற்றும் ஜவுளித் துறை மூலமாக விண்ணப்பித்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே இத்திட்டத்தை நிறுவியுள்ளன. இந்த இரு அமைப்புகளும் சுமார் 200 சாயப்பட்டறைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. இந்த 2 நிறுவனங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஓடையின் வழியாக நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கும்போது ஆறு மாசுபடும். எனவே, இத்திட்டத்தை அமைக்க அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.