வேளாண் சந்தையை ஒருங்கிணைக்க இணையதளம்: விவசாயிகளுக்குப் பயிற்சி
By DIN | Published On : 12th February 2019 06:27 AM | Last Updated : 12th February 2019 06:27 AM | அ+அ அ- |

நாடு முழுவதும் வேளாண் சந்தையை ஒருங்கிணைக்க மின்னணு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என ஈரோடு விற்பனைக் குழு செயலர் தெரிவித்தார்.
கோபி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நடைபெற்ற இ-நாம் குறித்தான விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இ-நாம் எனப்படும் தேசிய மின்னணு வேளாண் சந்தை அமைப்பானது இணையதளம் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூரிலுள்ள வணிகர்களை ஒருங்கிணைத்து விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய உதவுகிறது.
மேலும், இதனால் தேசிய அளவில் பெரிய சந்தை உருவாகி மொத்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இடைத்தரகர்கள் இன்றி வர்த்தகம் செய்ய வழி ஏற்படுகிறது.
மேலும், இதில் விளைபொருள்களுக்கு ஒரு இடத்தில் மட்டும் சந்தை வரி விதிக்கப்படுகிறது என்றார்.
முன்னதாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகேந்திரசிங் வரவேற்றார். ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் வாசுதேவன், கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் ஈரோடு அக்மார்க் ஆய்வக வேளாண் அலுவலர் சித்ரா, ஒழுங்கு முறை விற்பனைக்கூட அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், வர்த்தகர்கள், தனியார் வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் நித்யா நன்றி கூறினார்.