சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் வந்த 3,500 டன் அரிசி
By DIN | Published On : 12th February 2019 06:30 AM | Last Updated : 12th February 2019 06:30 AM | அ+அ அ- |

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,500 டன் புழுங்கல் அரிசி ஈரோட்டுக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது.
தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு இலவச புழுங்கல், பச்சரிசி வழங்கப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக, வாணிபக்கழக அதிகாரிகள் வட மாநிலங்களில் முகாமிட்டு அரிசியின் தரத்தை உறுதிசெய்தபின், அதைக் கொள்முதல் செய்து சரக்கு ரயில்களில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்திலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்காக 3,500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் 54 பெட்டிகளில் ஈரோடுக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் மூலப்பாளையம், பவானி சாலையிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து, ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் பிரித்து விநியோகிக்கப்படவுள்ளதாக நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.