பவானிசாகர்-தெங்குமரஹாடா சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள்
By DIN | Published On : 12th February 2019 06:29 AM | Last Updated : 12th February 2019 06:29 AM | அ+அ அ- |

பவானிசாகர்-தெங்குமரஹாடா சாலையில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விடியோ கட்செவி அஞ்சலில் பரவிவருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கோடை துவங்கும்முன்பே வனக் குட்டைகள் வறண்டு விட்டதால் குடிநீர், தீவனம் தேடி யானைகள் பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதிக்கு செல்கின்றன. பவானிசாகரில் இருந்து காராட்சிக்கொரை சோதனைச் சாவடி வழியாக தெங்குமரஹாடா செல்லும் சாலையில் யானைகள் வழிமறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடாவுக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து வனப் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே வழிமறித்து நின்ற யானைகளைக் கண்டு பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். சிறிதுநேரம் சாலையை ஆக்கிரமித்து நின்ற யானைகள் பேருந்தைப் பார்த்து அதனை நோக்கி ஓடி வந்தன.
பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்டனர். பேருந்து முன்பு யானைகள் தலையை ஆட்டியபடி சிறிதுநேரம் நின்றன. அப்போது ஓட்டுநர் பேருந்தைப் பின்னால் நகர்த்தினார். சுமார் அரை மணி நேரமாக விளையாடிய யானைகள் சற்று நேரத்தில் காட்டுக்குள் சென்றுவிட்டன. தகவலின்பேரில், அங்கு வந்த வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானைகள் மீண்டும் சாலையில் வந்து வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் என்பதால் ஒரு மணி நேரம் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.