கனி ஜவுளிச் சந்தையில் விரைவில் வணிக வளாகப் பணிகள்
By DIN | Published On : 04th January 2019 07:19 AM | Last Updated : 04th January 2019 07:19 AM | அ+அ அ- |

அரசின் ஒப்புதலுடன் வெகுவிரைவில் ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் புதிய அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது.
ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தினசரி வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், வாரந்தோறும் திங்கள்கிழமை இரவில் தொடங்கும் வாரச் சந்தை புதன்கிழமை வரை நடைபெறுகிறது. இதில், 300 க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இந்திய அளவில் வியாபாரிகள் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கனி மார்க்கெட் வாரச் சந்தை அமைந்துள்ள இடத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ. 55 கோடி மதிப்பில் புதிய அடுக்குமாடி நவீன வணிக வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் தயாரித்து கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. கனி ஜவுளிச் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாநகராட்சி அறிவித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. எனினும், வியாபாரிகள் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என மாநகராட்சியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
விரைவில் கனி ஜவுளிச் சந்தை கட்டடங்கள் இடிக்கப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலக வளாகத்துக்கு திரண்டு சென்று மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கடிதம் மூலம் பதில் அளிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கனி ஜவுளிச் சந்தை வியாபாரிகள் மாற்று இடத்தை தேர்வு செய்வதில் தாமதித்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகை வியாபாரம் முடிந்தவுடன் கனி ஜவுளிச் சந்தையில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் கூறியதாவது:
ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான கமிட்டியின் ஒப்புதல் வரும் பொங்கல் பண்டிக்கைக்குள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வளாக வரைபடத்தில் சில மாறுதல் செய்ய வாய்ப்புள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கிவிடும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் நிதி ரூ. 300 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்குவதற்காக கனி ஜவுளிச் சந்தையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் முன்னோட்டமாக பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு வரையில் சாலையோரக் கடைகள் கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.