குறைந்த அளவு நீரை வைத்து செம்மையான விவசாயம் செய்யும் கருவி அறிமுகம்
By DIN | Published On : 04th January 2019 07:16 AM | Last Updated : 04th January 2019 07:16 AM | அ+அ அ- |

குறைந்த அளவு நீரை வைத்து செம்மையான விவசாயம் செய்ய வழிவகுக்கும் கருவியின் அறிமுக விழா, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம் தலைமை வகித்து, குறைந்த அளவு நீரை வைத்து செம்மையான விவசாயம் செய்யும் "ஏஐ-ஏடிஐசி' கருவியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். கல்லூரி முதல்வர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.
அமெரிக்காவின் கன்ஸர்வாட்டர் நிறுவனத்தின் முதன்மை ஆபரேட்டிங் அதிகாரி சுப்பிரமணியம் சத்தியமூர்த்தி பேசியதாவது:
இந்திய விவசாயிகளுக்காக, மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூஷன், அமெரிக்காவின் கன்ஸர்வாட்டர் நிறுவனத்துடன் கூட்டுத் தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, உருவாக்கப்பட்டுள்ள "ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ) தொழில்நுட்பமானது, குறைந்த அளவு நீரை வைத்து செம்மையான விவசாயம் செய்ய வழி வகுக்கிறது. இந்திய நாட்டில் 60 சதவீதத்துக்கும்மேல் சிறு, நடுத்தர விவசாய நிலங்களைக் கொண்டுள்ளது. இதில், ஒரு சில விவசாயிகள் மட்டுமே மேற்கத்திய நாட்டினரைப்போல, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் (ஏஐ), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) ஆகிய புதிய தொழில்நுட்பங்கள், இந்திய வேளாண்மையை வெகுவாக வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒவ்வொரு இந்திய விவசாயியும் மேற்கத்திய நாட்டினரைப்போல, சிறந்த விவசாயம் செய்ய இந்த தொழில்நுட்பம் உதவும் என்றார்.
அதைத் தொடர்ந்து, மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூஷன் பங்குதாரர் டி.குமார், கன்ஸர்வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். மேலும் தகவல்களுக்கு ராஜகுமாரன் என்பவரை 98427-31759 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூஷனின் பங்குதாரர் கே.எஸ்.நல்லசிவம் நன்றி கூறினார்.