சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு
By DIN | Published On : 04th January 2019 07:19 AM | Last Updated : 04th January 2019 07:19 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்ற இடம் உள்பட அனைத்து இடங்களிலும் குழிகள் மூடாமல் சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநகராட்சியின் 60 ஆவது வார்டு பூந்துறை சாலை, சடைம்பாளையம் பிரிவு பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனு:
ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் குழிகள் மூடாமல், புதிய சாலைகள் போடாமல் மிக மோசமாக உள்ளது. புதை சாக்கடை திட்டத்துக்கு 4 சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்ட முனையங்களில் தண்ணீர் வெளியேறுகிறது. பல இடங்களில் மூடிகள் சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதை சீரமைக்க வேண்டும். புதை சாக்கடை இணைப்புக்காக பெறப்பட்ட தொகையை ஒப்பந்ததாரரிடம் வழங்கி விரைவாகப் பணியை முடிக்க வழிசெய்ய வேண்டும்.
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணியை விரைவாக முடித்து, இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும். வீட்டு வரி, வணிக நிறுவனங்களுக்கான வரி உயர்வை அமல்படுத்தக் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வந்த பின்னரே அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து, பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.