நந்தா கல்வி நிறுவனத்தில் படைப்பாற்றல் கண்காட்சி
By DIN | Published On : 04th January 2019 07:17 AM | Last Updated : 04th January 2019 07:17 AM | அ+அ அ- |

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில், கல்லூரி, பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் நோக்கில், விஞ்ஞானி - 2019 என்ற கண்காட்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடக்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் மருத்துவம், அறிவியல், பொறியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளான சைகை மூலம் செயல்புரியும் ரோபோ, மூலிகைச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் சாயங்கள், தென்னை மரத்திலிருந்து சுலபமாக தேங்காய் பறிக்கும் இயந்திரம், பெண்களின் பாதுகாப்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்லிடப்பேசி செயலி உள்பட 796 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 796 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இதில், ஈரோடு இந்து கல்வி நிலையம் தாளாளர் கே.கே.பாலுசாமி, கொங்கு கல்வி நிலையம் தாளாளர் கே. செல்வராஜ், ஏ.ஈ.டி. மெட்ரிக் பள்ளித் தாளாளர் காசியண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியைத் தொடர்ந்து, ஜனவரி 5 ஆம் தேதி "கிட்டோபீஸ்ட் 19' என்ற தலைப்பில் ஆடல், பாடல் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், 6 ஆம் தேதி வெவ்வேறு தலைப்புகள் கொண்ட ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.