பவானியில் உணவு வணிகர்களுக்கான பதிவுச் சான்று முகாம்
By DIN | Published On : 04th January 2019 07:21 AM | Last Updated : 04th January 2019 07:21 AM | அ+அ அ- |

பவானியில் உணவு வணிகர்களுக்கான உரிமம், பதிவுச் சான்று பெறுதல், புதுப்பித்தல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, பவானி வட்டார அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து நடத்திய இம்முகாமிற்கு, ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கே.கலைவாணி தலைமை வகித்து, பிளாஸ்டிக் தடை குறித்த சிறப்பு கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசினார்.
பவானி நகரம், ஈரோடு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் வணிகர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, தமிழக அரசு தடை விதித்துள்ள பொருள்கள், பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில், புதிதாகப் பதிவு செய்ய 107 விண்ணப்பங்களும், புதுப்பிக்க 59 விண்ணப்பங்களும் என மொத்தம் 166 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பவானி கிளைத் தலைவர் சுந்தரராஜன், செயலாளர் காதர் அலி பாபு, பொருளாளர் கனகராஜ், பவானி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் ஜி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...