பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் 2.5 டன் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 07:20 AM | Last Updated : 04th January 2019 07:20 AM | அ+அ அ- |

தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் அதிகாரிகள் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 2.5 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான் கூறியதாவது:
ஜனவரி 1 முதல் 19 விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், முதல் நாளில் அனைத்து வியாபாரிகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல பகுதிகளில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 500 கிலோ மட்டும் பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தோம். ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் பல்வேறு குழுவாக பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், டீ கடை, ஹோட்டல், பேக்கரி, மளிகைக் கடை, பெட்டிக் கடைகளிலும் சோதனை நடத்தினோம்.
அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மட்டும் பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளோம். அடுத்த முறை இதேபோல பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்.
மேலும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட கவர், கப், தட்டு போன்றவற்றை என்ன செய்வது எனத் தெரியாமல் வைத்திருந்தனர். அவற்றையும் பெற்றுக் கொண்டோம். கடந்த இரு தினங்களில் மட்டும் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.