வேதிப்பொருள் வாங்கிவிட்டு ரூ. 12 லட்சம் மோசடி: தொழிலதிபர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:21 AM | Last Updated : 04th January 2019 07:21 AM | அ+அ அ- |

ஈரோட்டில் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேதிப்பொருள் வாங்கிவிட்டு ரூ. 12 லட்சம் மோசடி செய்த டெக்ஸ்டைல் உரிமையாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு, பவானி சாலை சேரன் வீதியில் தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஈரோடு, பிருந்தா வீதியில் ஸ்ரீ அம்மன் டெக்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் ஈரோடு, இந்து நகரைச் சேர்ந்த ஜெயபால் (47) என்பவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 12 லட்சத்து 28 ஆயிரத்துக்கு கடனாக கெமிக்கல்ஸ் வாங்கி உள்ளார். ஆனால், கடன் தொகையை செலுத்தாமல் தொடர்ந்து அலைக்கழித்து வந்தாராம்.
இதையடுத்து, ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரகுநாதன் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயபால் இதேபோல பல்வேறு நிறுவனங்களில் கெமிக்கல்ஸ் வாங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயபாலை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...