சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 03rd July 2019 07:34 AM | Last Updated : 03rd July 2019 07:34 AM | அ+அ அ- |

முறைகேடாக கிணற்றிலிருந்து கல் குவாரிக்கு தண்ணீர் கொண்டு சென்றதைக் கண்டித்து, பொதுமக்கள் சென்னிமலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை இரவு போராட்டம் நடத்தினர்.
சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஊராட்சி சார்பில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணறுகளின் அருகில் ஈங்கூர், வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த வி.கே.பழனிசாமி என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் அருகில் உள்ள இந்தக் கிணற்றில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பாண்டிபாறை இடத்தில் உள்ள தனது நிலத்துக்கு பாசன வசதிக்காக சாலையோரம் குழாய்கள் அமைக்க சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வி.கே.பழனிசாமி 2018 மார்ச் 12 ஆம் தேதி விண்ணப்பம் கொடுத்திருந்தார். அதன்பேரில், அவருக்கு 10 நாள்களில் குழாய்கள் அமைக்க கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அனுமதி வழங்கினார். பின்னர் குழாய்கள் அமைத்து அதன்மூலம் பாண்டி பாறைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், குழாய் வழியாகச் செல்லும் தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்தாமல் அதே பகுதியில் உள்ள தனது கல் குவாரியில் செயற்கை மணல் தயாரிப்புக்கு வி.கே.பழனிசாமி பயன்படுத்தியதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது கிணற்றை மேலும் ஆழப்படுத்துவதற்கான பணியில் வி.கே.பழனிசாமி ஈடுபட்டு வந்தார். தற்போது, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில் மேலும் கிணற்றை ஆழப்படுத்தினால் அருகிலேயே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் அறவே கிடைக்காது என்பதை உணர்ந்த அய்யம்பாளையம் பொதுமக்கள் கிணறு தோண்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எஸ்.கோவிந்தராஜ், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து, வி.கே.பழனிசாமி தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்தாமல் கல்குவாரிக்கு பயன்படுத்தியதை உறுதி செய்தனர். உடனடியாக அந்தக் குழாய்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார், சென்னிமலை காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முறைகேடாக அமைத்துள்ள குழாய்களை அகற்ற உத்தரவிட்டால் மட்டுமே தங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறினர். அதைத்தொடர்ந்து, குழாய்களை அகற்றக் கோரி வி.கே.பழனிசாமிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதற்கான நகலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.