நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:32 AM | Last Updated : 03rd July 2019 07:32 AM | அ+அ அ- |

ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 6 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவன வளர்ச்சிக்கு பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களின் வயதை 60 இல் இருந்து 58 ஆக குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் வரும் 4 ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணுசாமி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சையது இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில உதவி செயலாளர் மணியன், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இந்தப் போராட்டத்தில் டெலிபோன் பவன் ஊழியர்கள், தாராபுரம், மூலனூர், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர். புதன்கிழமை (ஜூலை3) நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமேலாளர்
அலுவலக ஊழியர்கள், கோபி, சத்தியமங்கலம், ஈரோடு ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஊழியர்களும், வியாழக்கிழமை(ஜூலை 4) நடைபெறும் போராட்டத்தில் ஈரோடு புறநகர் மற்றும் பெருந்துறை ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.