2 நாள்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதம்: அமைச்சர் ஆய்வு
By DIN | Published On : 09th June 2019 03:00 AM | Last Updated : 09th June 2019 03:00 AM | அ+அ அ- |

ஈரோடு அருகே பாசூர் தடுப்பணை வழியாக நாமக்கல் மாவட்டம் செல்லும் சாலையில் 2 நாள்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை பல இடங்களில் சரிந்ததால் சனிக்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஈரோடு-நாமக்கல் மாவட்டத்தை காவிரி ஆறு குறுக்காகப் பிரிக்கிறது. இதில் ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மின் கதவணை திட்டப் பாலம் வழியாக சென்றால் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையை அடையலாம்.
அதுபோல் பாசூர் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மின் கதவணை திட்டப் பாலம் வழியாக சென்றால், நாமக்கல் மாவட்டம் வேலூர்-பள்ளிபாளையம் சாலையை அடையலாம்.
இவ்விரு சாலை வழியாகவும் ஈரோடு-கரூர் மார்க்கமாக வரும் வாகனங்கள், நாமக்கல் மாவட்டத்துக்குச் செல்லும். இதனால் இச்சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாசூர் மின் கதவணை திட்ட சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் பெரிய அளவில் பள்ளம், மேடு காணப்பட்டது. இதனால் கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைத்து, புதிய தார் சாலை அமைத்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சாலையின் பெரும் பகுதி சரிந்தது. சிறிய பாலத்தின் இரு புறமும் முற்றிலும் பெயர்ந்து, தார் மட்டும் தொங்கியது. இந்த சரிவில், மின் கம்பங்களும் சரிந்தன. உடனடியாக அப்பகுதியினர், வாகனங்களில் சென்றவர்கள் சேர்ந்து, கற்களை சாலையில் வைத்து, பிற வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் தடுத்தனர். இதனால் நாமக்கல்- ஈரோடு மாவட்டங்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டன. சனிக்கிழமை காலை 8 மணி அளவில் போலீஸார் வந்து சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தினர். இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த இடத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பார்வையிட்டார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மின் வாரிய இயக்குநர் (மின் உற்பத்தி) சந்திரசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.சக்திகணேசன், அர.அருளரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அந்த இடத்தில் தடுப்பு வைத்து 2 நாள்களில் தரமான சாலையை அமைக்கவும், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லலாம் என அறிவிப்புப் பலகை வைக்கவும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நுழைவுப் பகுதியில் தடுப்பு வைக்கவும், அமைச்சர் பி.தங்கமணி உத்தரவிட்டார்.