ஆசிரியர் தகுதித் தேர்வு: 5,171 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 09th June 2019 03:00 AM | Last Updated : 09th June 2019 03:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வை 14 மையங்களில் 5,171 பேர் எழுதினர்.
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வில் முதல் தாள், 8 ஆம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் 5,788 பேர் முதல் தாள் எழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால் தேர்வில் 617 பேர் பங்கேற்கவில்லை. 5,171 பேர் தேர்வு எழுதினர். முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 116 பேர் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி பார்வையிட்டார்.