சத்தி அருகே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 09th June 2019 03:02 AM | Last Updated : 09th June 2019 03:02 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய்புளியம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. காற்றின் காரணமாக மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில், சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் மாதேஸ்வரன் கோயில் அருகே சாலையோரம் இருந்த மரம் காற்றின் வேகம் தாங்காமல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற புன்செய்புளியம்பட்டி போலீஸார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மரம் முறிந்து விழுந்ததால் சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.