சொட்டுநீர்ப் பாசனத்துக்கு ரூ.2.91 கோடி மானியம்
By DIN | Published On : 09th June 2019 03:02 AM | Last Updated : 09th June 2019 03:02 AM | அ+அ அ- |

2019-2020ஆம் ஆண்டில் கோபி வட்டாரத்துக்கு சொட்டுநீர் தெளிப்பு நீர்ப் பாசனத்துக்கு ரூ.2.91 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப் போலவே நடப்பு நிதியாண்டிலும் சொட்டு நீர் உள்ளிட்ட நீர் சேமிப்புத் திட்டங்களுக்கு மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சொட்டுநீர், தெளிப்புநீர் (ஸ்பிரிங்லர்), மழைத் துவுவான் (ரெயின் கன்) ஆகிய நுண்ணீர்ப் பாசனக் கருவிகளுக்கு 100 சதவீதம் வரை (அதிகபட்சம் ஏக்கருக்கு ரூ.42 ஆயிரம்) மானியம் வழங்கப்பட்டது.
அதே போன்று நடப்பு நிதியாண்டிலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் அதிகபட்சம் 5 ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் அதிகபட்சம் 12 ஏக்கர் வரையிலும் மானியம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 30 க்கும் மேற்பட்ட பாசன நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோபி வட்டாரத்தில் கடந்த ஆண்டில் 737 ஏக்கருக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 365 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 615 ஏக்கருக்கும் கூடுதலாக சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து இருந்தாலும் தற்போது பக்கவாட்டுக் குழாய்கள் உள்ளிட்ட பாகங்கள் புதியதாக அமைப்பதற்கு மீண்டும் மானியம் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் கோபி வட்டாரத்துக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு 1225 ஏக்கருக்கு ரூ.2.91 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துகள், தென்னை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படும்.
மேலும், கோபி வட்டாரத்தில் உள்ள 32 வருவாய் கிராமங்களிலும் விடுபாடு இன்றி சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் அமைப்பதற்கு தீவிர கிராமக் கூட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதுடன், பயிரின் வேரின் அருகே பயிருக்குத் தேவையான சத்துகள், மருந்துகள் சேதாரமின்றி கிடைக்கின்றன. களைத் தொல்லை குறைந்து கூலி ஆள் செலவும் மீதமாகிறது. வறட்சிக் காலத்திலும் குறைந்த நீரில் நிறைந்த மகசூல் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
இது குறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.