தோல்வியால் துவண்டுவிடாமல் மக்கள் பணியாற்ற வேண்டும்: அமைச்சர் கே.சி.கருப்பணன்
By DIN | Published On : 09th June 2019 03:01 AM | Last Updated : 09th June 2019 03:01 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் அதிமுகவினர் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கேட்டுக் கொண்டார்.
பவானி ஒன்றியத்தில் குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூர், மைலம்பாடி, சன்னியாசிபட்டி பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
அதிமுக அரசின் சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துரைத்து உண்மை நிலையினை வாக்காளர்களிடம் உணரவைக்க வேண்டும். தோல்வி எப்போதும் நிரந்தரமானதல்ல.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டுவிடாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் வகையில் கட்சியினர் ஒருங்கிணைந்து, உற்சாகமாகப் பாடுபட வேண்டும் என்றார்.
திருப்பூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறியப்பட்டது. அதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு, பவானி நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ், பாஜக மாவட்டப் பொதுச் செயலர் சித்திவிநாயகன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், பவானி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.