மேட்டூர் சாலையில் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி
By DIN | Published On : 09th June 2019 03:02 AM | Last Updated : 09th June 2019 03:02 AM | அ+அ அ- |

ஈரோடு, மேட்டூர் சாலையில் பேருந்துகளைத் தவிர இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாநகரில் தற்போது புதை மின் வடம், புதை சாக்கடை, ஊராட்சிக் கோட்டை கூட்டுக் குடிநீர்க் குழாய் பதிக்கும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஈரோடு அகில்மேடு வீதியில் புதை சாக்கடைக் குழாய் பதிக்கும் பணி இப்போது நடக்கிறது.
இதனால் திருச்சி, கோவை, திருப்பூர் பேருந்துகள் வாசுகி வீதி வழியாக சென்று வந்தன. தற்போது வாசுகி வீதியிலும் கழிவு நீர்க் குழாய் பதிக்கும் பணி நடந்து வருவதால் பேருந்துகள், இதர வாகனங்கள் மேட்டூர் சாலை வழியாக சென்று வருகின்றன.
எனவே, வாகன ஓட்டிகள் மேட்டூர் சாலையில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க பேருந்துகளைத் தவிர இதர வாகனங்கள் கனி மார்க்கெட் சாலை, காமராஜர் சாலை, திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் சாலை, மணிக்கூண்டு சாலை வழியாக வந்து, நேதாஜி சாலை, சத்தி சாலையை அடைந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இந்த சாலைகளைப் பயன்படுத்தும்போது ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் சிரமமின்றி செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.