படைப்புழுவைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 14th June 2019 08:56 AM | Last Updated : 14th June 2019 08:56 AM | அ+அ அ- |

கோபி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் கூகலூரில் ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட படைப்புழு எனும் பூச்சியானது கடந்த 2016ஆம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. இது ஆப்பிரிக்க நாடுகளில் பரவி சீனா, இலங்கை, தாய்லாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது இப்பூச்சியின் தாக்குதல் தமிழகத்திலும் கணடறியப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துக் கிராமங்களிலும் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், நேரடி செயல் விளக்கங்கள், படக்காட்சிகள் மூலம் படைப்புழு தாக்குதல் குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
முகாமில், கூகலூர் வேளாண்மை அலுவலர் பவானி வரவேற்றார். கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, படைப்புபுழுவின் வாழ்க்கை வரலாறு, அவை தாக்கும் பயிர்கள், பெவேரியா பேசியானா, மெட்டாரைசியம் போன்ற உயிரியல் மருந்துகள் மூலம் படைப்புழுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, ரசாயன மருந்துகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்தார்.
முகாமில் படைப்புழு குறித்தான விளக்கத் திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் கூகலூர், தண்ணீர்பந்தல்புதூர், புதுக்கரைப்புதூர், சர்க்கரைபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூகலூர் உதவி வேளாண்மை அலுவலர் ராஜா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி மேலாளர் தங்கராசு, தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.