லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்றவர் உயிரிழப்பு
By DIN | Published On : 14th June 2019 08:53 AM | Last Updated : 14th June 2019 08:53 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கணக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (59). விவசாயத் தொழிலாளி. இவர் கணக்கரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்குத் தயாரானார். அப்போது கோவையிலிருந்து பவானிசாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு அட்டை பாரம் ஏற்றிய லாரி கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் அங்கு நின்றுகொண்டிருந்த பழனிசாமி லாரியின் அடியில் சிக்கிக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து லாரியை நகர்த்தி பழனிசாமியை மீட்டனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பழனிசாமி இறந்தார். சாலையில் கவிழ்ந்த லாரியின் ஓட்டுநரான பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த விபத்து நிகழ்ந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...