தேர்தல் வாகனச் சோதனை: ரூ.5.90 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 07:16 AM | Last Updated : 30th March 2019 07:16 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.90 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானியை அடுத்த கவுந்தப்பாடி நான்குமுனை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோபியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
வேனில் பயணம் செய்த சத்தி வட்டம், சென்னப்பனூரைச் சேர்ந்த பெரிய பொம்மநாயக்கர் மகன் பழனிச்சாமியிடம் ரூ.82,400, அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சேகரிடம் ரூ. 75,000 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆடுகள் வாங்குவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.1,57,400 ரொக்கத்தை பறிமுதல் செய்து, உதவித் தேர்தல் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.
பவானியை அடுத்த அத்தாணி வரப்பள்ளம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் உமா மகேஸ்வரன் தலைமையில், அவ்வழியே சென்ற வேனை நிறுத்தி சோதனையிடப்பட்டது. அப்போது, வேனில் சென்ற சத்தியமங்கலம், பனங்காட்டூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து ரூ.63,500 ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தியூர் வட்டாட்சியர் கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் திருச்சியில் வாழைக்காய்களை விற்றுவிட்டு பணத்துடன் திரும்பியபோது ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோபியில்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் பகுதியில் அசோக் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், காவல் உதவி ஆய்வாளர் குட்டியண்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோபியிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற சொகுசு காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்த பணத்தை கோபி கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.
கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் கேரள, மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அலியார் என்பவர், கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் இயந்திரம் வாங்கியது போக மீதமுள்ள பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானிசாகர் அருகே ரூ. 1.72 லட்சம் பறிமுதல்: பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த சிவக்குமார், சுரேஷ் ஆகியோர் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் கோவையில் பட்டு சேலைகளை விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று வந்ததாக தெரிவித்தனர். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...