மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th March 2019 07:16 AM | Last Updated : 30th March 2019 07:16 AM | அ+அ அ- |

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.சண்முகம் தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், துப்புரவு பணியாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் மாதம் ரூ.4,000 முதல் ரூ.7,000 ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் 60 வயது நிரம்பி, ஓய்வுபெறும்போது ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்கப்படுவதில்லை.
எனவே, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000 ஊதியம் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சுய உதவிக் குழு என்ற பெயரில் தினக்கூலி பணியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 5 ஆண்டு பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆண்டுகளாக மாதம் ரூ.1,500 ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...