ஆசார்ய ஸ்ரீமஹாஷ்ரமண் பொதுமக்களுக்கு ஆசி
By DIN | Published On : 05th May 2019 03:43 AM | Last Updated : 05th May 2019 03:43 AM | அ+அ அ- |

அஹிம்சை நெடும் பயணம் மேற்கொண்டுள்ள ஜைன ஸ்வேதாம்பர் தேராபந்த் அறச்சங்கத்தின் 11ஆவது தலைமை அடிகளார் ஆசார்யர் ஸ்ரீமஹாஷ்ரமண் ஈரோட்டில் பொதுமக்களுக்கு ஆசியளித்தார்.
நல்லெண்ணம், நன்னெறி, போதை விடுவிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய 3 நாடுகளில் அஹிம்சை நெடும்பயணத்தை ஜைன ஸ்வேதாம்பர் தேராபந்த் அறச்சங்கத்தின் 11ஆவது தலைமை அடிகளார் ஆசார்யர் ஸ்ரீமஹாஷ்ரமண் செய்து வருகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தில்லியில் தனது பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து நேபாளம், பூடான் நாடுகளுக்கு சென்று இந்தியாவில் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், தமிழகம் என 19 மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக ஈரோடு-கரூர் சாலையில் உள்ள ஆர்.டி. இன்டர்நேஷனல் பள்ளிக்கு அடிகளார் ஆசார்யர் ஸ்ரீமஹாஷ்ரமண் வெள்ளிக்கிழமை வந்தார். அடிகளாரை பள்ளி நிர்வாகி செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் ராதா செந்தில்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நல்லெண்ணத்தை மக்களிடையே பரப்புதல், நன்னெறியை நடைமுறைப்படுத்தி பரப்புதல், போதை ஒழிப்பு இயக்கம் ஆகிய மூன்றும் அஹிம்சை நெடும் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
அடிகளார் செல்லும் இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் மூன்று அஹிம்சை இலக்குகள் குறித்தும் உறுதிமொழி ஏற்று வருகின்றனர். ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.