கோடை உழவு: 13,000 ஹெக்டேருக்கு தலா ரூ.1,500 மானியம் வழங்க இலக்கு
By DIN | Published On : 05th May 2019 03:43 AM | Last Updated : 05th May 2019 03:43 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் கோடை உழவு செய்ய 13,000 ஹெக்டேருக்கு தலா ரூ.1,500 மானியம் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வி.குணசேகரன் தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் 14,562 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போதைய தட்பவெப்ப நிலையில் மக்காச்சோள பயிரை படைப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யும்போது மண்ணின் உறக்க நிலையில் இருக்கும் படைப்புழுக்களின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும்.
வயலை சுற்றி தட்டை, உளுந்து போன்ற பயறு வகை பயிர்களை வரப்பு, ஊடுபயிராகவும், சூரிய காந்தி, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்து பயிர்களை வரப்பு பயிராகவும், சாமந்தி பயிரை தடுப்பு பயிராகவும் பயிரிட்டு, படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
டிரைகோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பயன்படுத்தி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி அமைத்து படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
கோடைகால பயிர் சாகுபடி மேற்கொள்ளும் முன் விதைகளை பூஞ்சாண விதை நேர்த்தி, உயிர் உர விதை நேர்த்தி செய்வது அவசியம். கோடை உழவு செய்வதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழை நீர் சேகரிக்கப்படும்.
கோடை உழவு மேற்கொள்வதால் இயற்கை முறையில் புழு, பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மண்ணின் இறுக்கம் குறைந்து மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால், நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
முன் பருவ காலங்களில் பயன்படுத்திய ரசாயன பூச்சிக் கொல்லிகளின் வீரியம் குறைவதோடு களை செடிகளின் விதைகள் அழிக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் கோடை மழையை பன்படுத்தி கோடை உழவு செய்யலாம். கோடை உழவு செய்ய நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் மூலம் ஹெக்டேருக்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 13,000 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...