வெளிநாட்டில் சித்திரவதைக்கு ஆளான மனைவியை மீட்டுத்தர கணவர் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 03:46 AM | Last Updated : 05th May 2019 03:46 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் சித்திரவதைக்கு ஆளாகியுள்ள மனைவியை மீட்டுத் தர வேண்டும் என அவரது கணவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மனு அளித்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், மரப்பாலம் சாலையைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (48). இவரது மனைவி யாஸ்மின் (45). இவர்களுக்கு சமீன் (29) என்ற மகளும், நாஜிருல்லா(28) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நவாஸ்கான், அவரது மகள் சமீன் ஆகியோர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசனிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது அக்கா மகன் நிஜாமின் பரிந்துரையின்பேரில் எனது மனைவி யாஸ்மின் வீட்டு வேலைக்காக கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி குவைத் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். நான்கு மாதங்களாக குவைத் நாட்டில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி யாஸ்மின் என்னை தொடர்பு கொண்டார்.
அங்கு தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கொதிக்கும் தண்ணீரை கையில் ஊற்றி சித்திரவதை செய்வதாகவும், வேலை பார்த்ததற்கு ஊதியம் கேட்டால், வேலை அளித்தவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அடித்து உதைப்பதாகவும், இதனால் தன்னை காப்பாற்றும்படியும் கூறியவாறு இணைப்பை துண்டிக்கப்பட்டுவிட்டது. எனவே குவைத் நாட்டில் உள்ள என் மனைவியை பத்திரமாக மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...