ஒன்றன்பின் ஒன்றாக 3 பேருந்துகள் மோதல்: 2 பேர் காயம்; போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 15th May 2019 07:27 AM | Last Updated : 15th May 2019 07:27 AM | அ+அ அ- |

கார் மீது மோதாமல் இருக்க பேருந்து பிரேக் போட்டபோது பின்னால் வந்த பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன; 2 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஓமலூர், எடப்பாடி ஆகிய பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்றுகொண்டிருந்தன. அதேபோல திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து பள்ளிபாளையத்துக்கு கார் ஒன்று பேருந்துகளுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தது. காரை சுந்தர்ராஜ் (28) என்பவர் ஓட்டிச் சென்றார்.
மாட்டுச் சந்தைக்கு எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக காரை ஓட்டுநர் திடீரெனத் திருப்பினார். அப்போது கார் மீது மோதாமலிருக்க சேலத்துக்கு சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டார். அப்போது, பின்னால் வந்த ஓமலூர், எடப்பாடி ஆகிய பகுதிகளுக்கு சென்ற தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
இதில் சேலம் சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடியும், எடப்பாடி சென்ற பேருந்தின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடியும், ஓமலூர் சென்ற பேருந்தின் முன் பக்க கண்ணாடியும் உடைந்தன. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 2 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சோதனைச் சாவடியில் கண்காணிப்பில் இருந்த போலீஸார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக ஈரோட்டில் இருந்து சென்ற வாகனங்களும், பள்ளிபாளையம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. விபத்தில் சிக்கிய பேருந்துகள் அங்கிருந்து அகற்றப்பட்ட பின் வாகனங்கள் நகர்ந்து சென்றன. இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.