தாளவாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்
By DIN | Published On : 15th May 2019 07:29 AM | Last Updated : 15th May 2019 07:29 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
தமிழக, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டல்பேட் பகுதியைச் சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் உள்ள இக்கலூர் கோயிலுக்குச் செல்ல அரசுப் பேருந்தில் தாளவாடி வந்தனர். தாளவாடியில் இருந்து கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதியில்லாத காரணத்தால் அங்கிருந்து ஆட்டோ மூலம் அவர்கள் கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர்.
சிக்கள்ளி என்ற இடத்தில் திரும்பும்போது, சாலையோரப் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த பெல்லையா, மாதேவய்யா, மாதேவப்பா, தொட்டம்மா, தாயம்மா ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.